கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பது ஏன்?

By இரா.வினோத்


பெங்களூரு: அதிக சொத்துகளை வைத்துள்ள 100 எம்எல்ஏக்களின் பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த 52 எம்எல்ஏக்கள் இடம்பெற்றுள்ளனர். நாட்டிலே அதிக சொத்துகளை வைத்துள்ள எம்எல்ஏக்களின் பட்டியலில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி என தெரிவித்துள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: நாட்டிலே அதிக சொத்துகள் கொண்ட எம்எல்ஏ க‌ர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
இருக்கிறார். கடந்த தேர்தலின்போது அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த சட்டப்பூர்வமான ஆவணத்தின்படி அவருக்கு ரூ. 1413 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.

கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ கே.ஹெச்.புட்டசாமி கவுடாவுக்கு ரூ.1,267 கோடி மதிப்புள்ள சொத்துகளும், காங்கிரஸ் எம்எல்ஏ பிரியா கிருஷ்ணாவுக்கு ரூ.1,156 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

இதேபோல நாட்டில் அதிக சொத்துகளை வைத்துள்ள 100 எம்எல்ஏக்களின் பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த 52 எம்எல்ஏக்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த 52 எம்எல்ஏக்கள் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்த 52 பேரில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் 34 பேர், ஆந்திராவை சேர்ந்தவர்கள் 10 பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர், தெலங்கானாவை சேர்ந்தவர்கள் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஸ்கிரட் சிங் கூறுகையில், ‘‘தென்னிந்திய எம்எல்ஏக்கள் வெளிப்படைத் தன்மையோடு தங்களின் சொத்து மதிப்பை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்களின் அசையா சொத்தின் விலை மதிப்பை பொறுத்தே சொத்து மதிப்பு அதிகமாக தெரிகிறது.

உதாரணமாக டி.கே.சிவகுமார், 30 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு சதுர அடி ரூ.2 ஆயிரம் வீதம் நிலம் வாங்கி இருக்கிறார். அதன் மதிப்பு தற்போது ஒரு சதுர அடி ரூ.35 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. நிலத்தின் மதிப்பு உயர்ந்ததால் அவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

நாட்டில் உள்ள பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களில் பெரும்பாலானவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்திருக்கிறது. அதன் காரணமாகவே அவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது.

அதேவேளையில் வட இந்திய எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 50 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE