ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் தீவிரவாத ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்
சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. மத்திய அரசு மேற்கொண்ட அணுகுமுறையால் தீவிரவாத ஊடுருவல் குறைந்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது முதல் எல்லை தாண்டிய ஊடுருவல் படிப்படியாக குறைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 141 ஊடுருவல் சம்பவங்கள் நடந்தன. 2020-ம் ஆண்டில் 51 ஊடுருவல்கள் நடந்தன. இந்த எண்ணிக்கை 2021-ல் 34-ஆக குறைந்தது. கடந்தாண்டு வெறும் 14 சம்பவங்கள் மட்டுமே நடந்தன.

மத்திய அரசு மேற்கொண்ட வியூகங்கள், எல்லை பகுதியில் படைகள் நிறுத்தம், கண்காணிப்பு கேமிராக்கள், இரவுநேரத்தில் பார்க்கக் கூடிய கேமிராக்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியது, தீவிர ரோந்துப் பணி போன்றவற்றால் தீவிரவாத ஊடுருவல் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE