சுற்றுப்பாதை 5-வது முறையாக மாற்றம்: ஆக.1-ல் நிலவை நோக்கி பயணிக்கிறது சந்திரயான்-3

By செய்திப்பிரிவு

சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆக.1-ம் தேதி நிலவை நோக்கி சந்திரயான் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு அதன்சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 4 முறை மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது முறையாக நேற்று மதியம் 2.30 மணி அளவில் விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் உயர்த்தப்பட்டது.

அதன்படி குறைந்தபட்சம் 236 கி.மீட்டர் தூரமும், அதிகபட்சம் ஒரு லட்சத்து 27,609 கி.மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிங்கப்பூருக்கு சொந்தமான 7 செயற்கைக் கோள்கள் வணிகரீதியாக பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்த ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE