மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றம் 4-வது நாளாக முடக்கம்: அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. இந்நிலையில் பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூரில் 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே முடங்கியது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4-வது நாளாக நேற்றும் முடங்கின.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘மணிப்பூர் சம்பவம் குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். எனவே, எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை’’ என்றார்.

இதற்கிடையே, மணிப்பூர் நிலவரம் குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் மணிஷ் திவாரி, கவுரவ் கோகாய் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். மக்களவை கூடியதும், மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர்.

அமளி தொடர்ந்ததால், மதியம் 2 மணி வரை அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மதியம் 2 மணிக்கு மக்களவை கூடிய பிறகும், அமளி நீடித்தது. இதற்கு நடுவே, உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அமளி தொடர்ந்ததால், மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை தொடங்கியதும், மணிப்பூர் வன்முறை தொடர்பாக அவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் விதி எண் 267-ன் கீழ் நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும், அதேபோல, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து விவாதிக்க பாஜக உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசியல் செய்ய கூடாது’’ என்றார். ‘‘அவை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விதி எண் 267-ன் கீழ் உடனடியாக விவாதிக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ், திரிணமூல், ஆம் ஆத்மி, திமுக, கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் கோஷமிட்டதால், மதியம் 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

மதியம் கூடிய பிறகு, அரசியல் சாசன (எஸ்.டி) 5-வது திருத்த மசோதா-2022 விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக நாள் முழுவதும் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.

அமித் ஷா கடிதம்: இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதில் ஒத்துழைப்பு அளிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் கார்கே உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

‘மணிப்பூரில் கடந்த 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி மணிப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவாலும், சில சம்பவங்களாலும் வன்முறை நடந்தது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE