கேரளாவில் கனமழை | 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை பெய்வதன் காரணமாக அங்கு இன்று 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 26) வரை கேரளாவில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டனர். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, தொழில்கல்வி நிறுவனங்கள் ஆகியனவற்றுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் வெள்ளரிகுண்டு மற்றும் ஹோஸ்துர்க் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பிஎஸ்சி தேர்வில் எந்த மாற்றமும் இல்லை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர் மீண்டும் இப்போது கேரளாவில் குறிப்பாக மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வானிலை ஆய்வு மையம் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் பள்ளி முடிந்து டியூஷன் சென்று இரு சிறார்கள் நீர்நிலையில் தவறிவிழுந்து இறந்தனர். திரிச்சூரில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE