உத்தர பிரதேசத்தின் கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடை

By செய்திப்பிரிவு

வாரணாசி: வாரணாசி கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் நேற்று காலை ஆய்வினை தொடங்கினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை 26-ம் தேதி வரை ஆய்வு நடத்த இடைக்கால தடை விதித்தது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதியில் நடத்தப்பட்ட களஆய்வில், மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது.

வீடியோவில் பதிவு: வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா கடந்த 21-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்கள ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 4-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். அதன்படி தொல்லியல் துறை நிபுணர்கள் நேற்று காலை 7 மணிக்கு கியான்வாபி மசூதியில் ஆய்வினை தொடங்கினர். முதலில் மசூதியின் சுற்றளவு அளவிடப்பட்டது. ஆய்வு பணி முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய மசூதியின் 4 புறமும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதனிடையே கியான்வாபி மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா வழக்கை விசாரித்தனர். அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹபீஷா அகமதி கூறும்போது, “கடந்த 1,500-ம் ஆண்டில் இருந்து மசூதி இருக்கிறது. இப்போது சுமார் 30 பேர் மசூதியை தோண்டி ஆய்வு செய்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

ரேடார் தொழில்நுட்பம்: இந்துக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும்போது, “வாரணாசி நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே ஆய்வு நடத்தப்படுகிறது. மசூதியை தோண்டவில்லை. அறிவியல்பூர்வமாக ரேடார் தொழில்நுட்பத்தில் ஆய்வு நடத்தப்பட உள்ளது’’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ஜூலை 26-ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தக்கூடாது. மசூதி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 11.50 மணிக்கு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நிறுத்தப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறும்போது, ‘‘தொல்லியல் துறை ஆய்வுக்கு மசூதி நிர்வாகம் ஒத்துழைக்க மறுக்கிறது. உயர் நீதிமன்றத்தில் எங்கள் கருத்துகளை எடுத்துரைப்போம். தொல்லியல் துறை ஆய்வு, வழக்கில் திருப்பு முனையை ஏற்படுத்தும்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE