ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸார் தாக்குதல்: பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் புகார்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி மணிப்பூர் வன்முறைக்கு ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, “நம் மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்றார். அடுத்த சில மணி நேரங்களில் அரசுக்கு எதிராக குறை கூறிய அமைச்சர் குதா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலையில் சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பு, “என்னிடம் உள்ள சிவப்பு டைரியில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை சட்டப்பேரவையில் தெரிவிப்பேன்” என கூறியிருந்தார். பின்னர் அவை கூடியதும், ராஜேந்திர சிங் குதா சிவப்பு டைரியுடன் பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தன்னுடைய அறைக்கு வந்து பேசுமாறு ஜோஷி தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து பேரவை விவகாரத் துறை அமைச்சர் ஷாந்தி தரிவால் அருகே சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏ-க்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று, சிவப்பு டயரி விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினர். இதனிடையே, ராஜேந்திர சிங் குதா பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து ராஜேந்திர சிங் குதா கூறும்போது, “பேரவையில் சுமார் 50 பேர் என்னை தாக்கினர். எட்டி உதைத்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் என்னை பேரவையிலிருந்து இழுத்துச் சென்று வெளியில் விட்டனர். பேரவைத் தலைவர் என்னை பேச அனுமதிக்கவில்லை. நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். என் மீது என்ன தவறு உள்ளது என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE