டெரிக் ஓ பிரையன் ஆவேசம் முதல் ‘ஏட்டிக்குப் போட்டி’ வரை - நாடாளுமன்ற ‘சம்பவங்கள்’

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான திங்கள்கிழமையும் மணிப்பூர் விவகாரத்தால் இரு அவைகளிலும் முடங்கின. அதேவேளையில், கவனிக்கத்தக்க சில சம்பவங்கள் அரங்கேறின. அவற்றின் தொகுப்பு...

டெரிக் ஓ பிரையன் காரசார விவாதம்: மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி டெரிக் ஓ பிரையனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. மாநிலங்களவைக் கூடியதும் பேசிய அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “அவையில் இன்று விவாதத்துக்காக விதி 176-ன் கீழ் 11 நோட்டீஸ்களும், விதி 267-ன் கீழ் 27 நோட்டீஸ்களும் அளிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். அப்போது விதி 176-ன் கீழ் நோட்டீஸ் அளித்தவர்களின் பெயர்களை அவர்கள் சார்ந்த கட்சிப் பெயருடன் சேர்த்து வாசித்தார். இதனைத் தொடர்ந்து, விதி 267-ன் கீழ் 27 நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும்போது, அவர்களின் கட்சியின் பெயர்களைக் குறிப்பிடாமல் உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் வாசித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமூல் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், “விதி 176-ன் கீழ் நோட்டீஸ் அளித்தவர்களின் பெயர்கைளைப் போலவே இவர்களின் பெயர்களையும் கட்சிப் பெயருடன் சேர்த்து வாசிக்க வேண்டும்” என்றார். எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களின் பெயர்களை அவைத் தலைவர் வாசிக்கும்போது, “எந்தக் கட்சி? எந்தக் கட்சி? எனக்கு கட்சித் தெரிய வேண்டும்!" என்று எழுந்து நின்று முழக்கமிட்டார் டெரிக் ஓ பிரையன்.

இதனைத் தொடர்ந்து டெரிக் ஓ பிரையனைப் பார்த்து அவைத்தலைவர், “முதலில் உங்கள் இடத்தில் உட்காருங்கள்” என்றார். அதனை ஏற்க மறுத்த டெரிக் ஓ பிரையன், கூப்பிய கரங்களுடன், “பாஜக எம்.பி.களின் பெயர்களை கட்சிப் பெயருடன் வாசித்த நீங்கள், அதே மரியாதையை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.களுக்கும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதையடுத்து, பிரையனை அவரது இருக்கையில் அமருமாறு சில முறை கூறினார். பின்னர் “டெரிக் ஓ பிரையன், உங்கள் இருக்கையில் அமருங்கள். நீங்கள் அவைத் தலைமையை எதிர்க்கிறீர்கள்” என்று கூறி, அவையை ஒத்திவைத்தார்.

அவையில் பதாகைகள்: பாஜக உறுப்பினர்கள் சுதன்ஷு திரிவேதி மற்றும் சுஷில் மோடி ஆகியோர் மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளித்தனர். அதேபோல், மக்களவைத் தொடங்கியதும் அவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். ‘இண்டியா மணிப்பூருடன் நிற்கிறது’ என்ற பதாகைகளையும் அவர்கள் காட்டி அமளியில் ஈடுபட்டனர்.

சஞ்சய் சிங் மீது நடவடிக்கை: அவைத் தலைவரின் உத்தரவுகளை தொடர்ந்து மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இந்தக் கூட்டத்தொடர் முழுவதுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டார். பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அந்த நிலையிலும் அவையில் கேள்வி நேரம் தொடர்ந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் அவையின் மையத்துக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து, சஞ்சய் சிங்கை அவரது இருக்கையில் சென்று அமருமாறு அவைத் தலைவர் கூறினார். ஆனாலும், அவர் தொடர்ந்து முழக்கமிடவே சஞ்சய் சிங்கின் பெயரினை அவைத் தலைவர் தன்கர் அழைத்தார். இதனைத் தொடர்ந்து, சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று பியூஷ் கோயல் தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் இந்த கூட்டத்தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அழைப்பும் புறக்கணிப்பும்: மாநிலங்களவை அலுவல் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, தற்போது நிலவி வரும் நாடாளுமன்ற முடக்கம் குறித்து சாத்தியமான தீர்வு காண எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தன.

ஆர்ப்பாட்டத்தில் போட்டா போட்டி: நாடாளுமன்றம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, என்டிஏ, இண்டியா எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக கூறி, அசோக் கெலாட் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அம்மாநில பாஜக எம்பிகள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், ‘ரியாக்டிவ் மோடு’ நிலையில் பாஜக இருப்பதாகவும், மணிப்பூர் பிரச்சினையை திசை திருப்ப "காப்பிகேட்" நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இண்டியா சரியாக செயல்படுகின்றது என்பதற்கான அறிகுறிகள். மணிப்பூர் விவாகரம் தொடர்பாக எங்கள் கூட்டணி சார்பில் ஜூலை 24-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். அதற்கு எதிர்வினையாக, எங்களை நகலெடுக்கும் விதமாக இன்று காலையில் அவசரமாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

அமித் ஷா சொல்வது என்ன? - பிற்பகல் 2.30 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது உள்துறை அமித் ஷா பேசினார். அப்போது அவர், "மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் விவாதிக்க விரும்புகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பிரதமர் பேச வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபடுகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால், அதுபற்றி விவாதிக்க வேண்டும்" என்றார். எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கார்கே சொல்வது என்ன? - காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மணிப்பூர் மட்டுமல்லாது, நாட்டின் வேறு சில மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துள்ளதால் அவை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கார்கே, “மணிப்பூரோடு மற்ற மாநிலங்களை ஒப்பிட முடியுமா? மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக இல்லை. இதுபோல வேறு எங்காவது உள்ளதா? அவர்கள் தங்கள் பலவீனத்தை மறைக்க வேறு சில இடங்களில் நடந்த விஷயங்களை இழுப்பது சரியல்ல.

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ஆட்சியாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நீங்கள் உங்கள் கவலையை தெரிவிக்கலாம். உங்கள் மக்கள்தான் அங்கு இருக்கிறார்கள். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிடுவது ஒன்றும் புதிதல்ல. எப்போதுமே இது நடக்கக்கூடியதுதான். ஜனநாயகத்தில் பேச்சுரிமை இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் ஏதோ ஒரு வகையில் குரல்களை நசுக்குவதுதான். விதிப்படி விவாதம் நடத்தப்பட வேண்டும்; ஆனால் அவர்கள் தயாராக இல்லை. மணிப்பூர் பிரச்சினை பிரதானமானது. இது ஒரு சிறிய பிரச்சினை அல்ல. இது குறித்து விவாதிக்கப்பட்டு, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பிரதமர் கூற வேண்டும். அவர் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பது புரியாத ஒன்று" என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதேபோல், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "மணிப்பூர் விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் சபைக்கு வந்தால், வானம் இடிந்து விடாது. உலகம் முழுவதும் - ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வரை, இது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இது உள்துறை அமைச்சகத்துக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. எனவே, பிரதமர் மோடி அவசியம் அவைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.

முடக்கம் ஏன்? - மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு இளம் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிரொலித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல் நாளில் மணிப்பூர் அவலம் தொடர்பான வீடியோ வெளியானதால் முதல் இரண்டு நாட்கள் கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாளும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

‘மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுகுறித்து நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருன்றன. மணிப்பூர் குறித்து அரசு குறுகிய விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கூறிவருகிறது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றனர். இந்தப் போக்கின் காரணமாகவே மத்தியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் முடங்கிக் கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE