கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த ஜூலை 26 வரை உச்ச நீதிமன்றம் தடை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்து அமைந்துள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் உத்தரவை ஜூலை 26-ம் தேதி (புதன்கிழமை) மாலை வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுஷிபா அக்மதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு புதன்கிழமை வரை ஆய்வு நடத்துவதற்கு தடை விதித்தது. மேலும், தடை உத்தரவு முடிவதற்குள், தொல்லியல் துறையின் ஆய்வினை எதிர்த்து மசூதி நிர்வாகம் தாக்கல் செய்யும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

முன்னதாக, உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிஸிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், மசூதி வளாகத்தில் எந்தவித ஆக்கிரமிப்பு வேலையும், ஆய்வும் செய்ய வேண்டாம் என்று தொல்லியல் துறையிடம் தெரிவிக்கும் படி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

காலையில் தொடங்கிய ஆய்வு: வாரணாசி நீதிமன்றத்தின் ஜூன் 21-ம் தேதி உத்தரவுப்படி, தொல்லியல் துறை திங்கள்கிழமை காலையில் கியான்வாபி மசூதியில் ஆய்வினைத் தொடங்கியது. இதற்காக, மசூதி அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மசூதிக்குள் தொல்லியல் துறை அதிகாரிகள், வழக்கைத் தொடர்ந்த 4 இந்துப் பெண்கள், அவர்களின் வழக்கறிஞர்கள், கியான்வாபி மசூதி நிர்வாகக் குழுவினர் உள்பட 40 பேர் சென்றிருந்தனர்.

வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு: தொல்லியல் துறையின் ஆய்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா பிறப்பித்த உத்தரவில், "வாரணாசியின் கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான கள ஆய்வினை நடத்த வேண்டும். ஒசுகானா பகுதியில் மட்டும் ஆய்வு நடத்தக்கூடாது. ஆய்வின்போது மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது. ஆய்வின்போது தொழுகை நடத்தலாம். ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

வழக்கு பின்னணி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி கடந்த 2021-ல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி 4 இந்து பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் இந்து பெண்கள் சார்பில் கூறும்போது, “ஆதி விஸ்வேஸ்வரரின் கோயில் மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டு உள்ளது. இதை உறுதி செய்ய கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்" என்று வாதிட்டனர்.

கியான்வாபி மசூதி நிர்வாகம் கூறும்போது, “எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மீதும் மசூதி கட்டப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் ஜூலை 14-ம் தேதி முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆய்வு நடத்த அனுமதியளித்து ஜூலை 21-ம் தேதி மாவட்ட நீதிமன்றம் உத்தவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE