கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கியது: வாரணாசியில் பலத்த பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

வாரணாசி: உத்தரப் பிரதேசம், வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று காலை அங்கு ஆய்வு தொடங்கியது.

மசூதிக்குள் 40 பேர் ஆய்வு: உத்தரப் பிரதேச போலீஸார் கியான்வாபி மசூதி அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மசூதிக்குள் தற்போது தொல்லியல் துறை அதிகாரிகள், வழக்கைத் தொடர்ந்த 4 இந்துப் பெண்கள், அவர்களின் வழக்கறிஞர்கள், கியான்வாபி மசூதி நிர்வாகக் குழுவினர் உள்பட 40 பேர் உள்ளனர்.

மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று ஆய்வு தொடங்கியுள்ளது.முன்னதாக நேற்றே தொல்லியல் ஆய்வுத் துறை அதிகாரிகள் வாரணாசி வந்தடைந்தனர்.

இதற்கிடையில் தி அஞ்சுமான் இன்டேஸமியா மஸ்ஜித் குழு (The Anjuman Intezamia Masajid Committee) ஆய்வில் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அதன் இணைச் செயலாளர் எஸ்எம் யாசின் கூறுகையில், "நாங்கள் தொல்லியல் துறை ஆய்வைப் புறக்கணிக்கின்றோம். நாங்களோ அல்லது எங்கள் தரப்பு வழக்கறிஞர்களோ இந்த ஆய்வில் பங்கேற்கப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளது.

வழக்கு பின்னணி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி கடந்த 2021-ல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி 4 இந்து பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் இந்து பெண்கள் சார்பில் கூறும்போது, “ஆதி விஸ்வேஸ்வரரின் கோயில்மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டுஉள்ளது. இதை உறுதி செய்ய கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்" என்று வாதிட்டனர்.

கியான்வாபி மசூதி நிர்வாகம் கூறும்போது, “எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மீதும் மசூதி கட்டப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் கடந்த 14-ம் தேதி முடிவடைந்தன. இந்த சூழலில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம், "வாரணாசியின் கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான கள ஆய்வினை நடத்த வேண்டும். ஒசுகானா பகுதியில் மட்டும் ஆய்வு நடத்தக்கூடாது. ஆய்வின்போது மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது. ஆய்வின்போது தொழுகை நடத்தலாம். ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தது. இந்நிலையில் இன்று காலை ஆய்வு தொடங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE