புதுடெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.33 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள் பல மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கித் தவிக்கின்றன. ஜூலை 24 (திங்கள்கிழமை) மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.33 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் யமுனையின் நீர்மட்டம் 206.44 மீட்டராக இருந்த நிலையில் இன்று காலை சற்றே குறைந்திருந்தாலும் தொடர்ந்து அபாய எல்லையைத் தாண்டிய அளவிலேயே உள்ளது. யமுனையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ளம் போல் தண்ணீர் சூழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நிலவரம் இவ்வாறாக இருக்க காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கேரான் செக்டாரில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்தச் சம்பவத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அம்மாவட்ட வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குஜராத்துக்கு ஆரஞ்சு அலர்ட்: குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் 3000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில் குஜராத் மாநிலத்துக்கு இன்று (ஜூலை 24) கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணித்த இந்திய வானிலை ஆய்வு மையம் அம்மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தேவ்பூமி துவாரகா, வால்சாட், ராஜ்கோட், பாவ்நகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உ.பி. நிலவரம்: உத்தரப் பிரதேசத்தின் 13 மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கங்கை, யமுனை ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உ.பி.யில் மழை வெள்ளம் சார்ந்த அசம்பாவிதங்களால் 4 பேர் உயிரிழந்தனர் என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 25,281 பேர் மீட்கப்பட்டு அவர்கள் 61 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் 300 சாலைகள் முடக்கம்: உத்தராகண்ட் மாநிலத்தில் மழை தொடர்வதால் பல்வேறு ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக 300க்கும் மேற்பட்ட சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இமாச்சலில் இன்றும் மழைக்கு வாய்ப்பு: இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்வதால் சம்பா மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு மக்களுக்கு எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மழை தொடர்வதால் மக்கள் மலைப்பாங்கான இடங்களுக்குச் செல்ல வேண்டாம். நிலச்சரிவு அபாயம் இருக்கின்றது.
- மோசமான வானிலை தொடர்வதால் ட்ரெக்கிங் செல்ல வேண்டாம்.
- மின்னல் தாக்கும் அபாயம் இருக்கிறது. மின்னல் அதிகமாக இருந்தால் குறைந்தது அரை மணி நேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்.
- நதிகள், ஏரிகள் அருகே செல்ல வேண்டாம்.
- வானிலை ஆய்வு மையங்களின் எச்சரிக்கையை அசட்டை செய்ய வேண்டாம்.
- கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள், தனியார் அமைப்புகள், சுற்றுலாப் பயணிகள், ட்ரெக்கிங் செய்வோர் தங்களுக்குக் கிடைத்த வானிலை அறிவிப்புகளை உடனுக்குடன் மற்றவர்களுக்கு பகிருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு இமாச்சலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நிலைமை இன்னும் மோசமடையலாம் என்று இமாச்சல் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சேதம் அடைந்த சாலைகள், பாதிப்பு ஏற்பட்ட மின் மற்றும் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்துக்கு உடனடி நிவாரணம் தேவை. மத்திய அரசிடமிருந்து 2022-23-ம்ஆண்டுக்கான பேரிடர் நிதியில் இருந்து நிலுவையில் உள்ள ரூ.315 கோடியை வழங்க வேண்டும் என அம்மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago