பெங்களூரு சிறையில் தீவிரவாதி நசீர் மீது விசாரணை கைதிகள் தாக்குதல்

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்த வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி டி.நசீர் மீது மத்திய சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சையத் சோஹைல் (24), உமர் (29), ஜுனைத் (30), முதாஷிர் (28), ஜாஹித் (25) ஆகிய 5 பேரை கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 12 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 5 வாக்கி டாக்கி, 7 துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள், கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 5 பேரையும் தனித்தனியாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், கைதான 5 பேரும் 2017-ம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் இருந்தபோது தீவிரவாதி டி.நசீரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அவர் 2008-ம் நடந்த பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு இருக்கிறது. டி.நசீரின் மூலமாக இவர்களுக்கு சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிறையில் உள்ள நசீரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அவர் சிறையில் இருந்தவாறு வெளிநாட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதி முகமது ஜுனைத் உடன் செல்போனில் பேசினாரா என்பது குறித்து விசாரிக்குமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் சிறைத்துறை கூடுதல் டிஜிபி மாலினி கிருஷ்ணமூர்த்தி, நசீரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

அவர் திரும்பி வந்த போது சிறை வளாகத்தில் மது, மஞ்சு உள்ளிட்ட விசாரணைக் கைதிகள் நசீரை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த டி.நசீருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து போலீஸார் கைதான 5 பேர் மற்றும் நசீரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நசீரை தாக்கிய கைதிகளையும் விசாரித்து வருவதாக சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE