‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தை காண காஷ்மீர் தியேட்டரில் அலைமோதும் மக்கள்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓபன் ஹைமர்’. அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும், ஓபன்
ஹைமரின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

அதன்படி காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள ஒரே ஒரு தியேட்டரில் இந்த திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. காஷ்மீரில் கடந்த 1989-ம் ஆண்டுக்குப் பிறகு தீவிரவாதம் அதிகரித்தது. அதனால் தியேட்டர்கள் மூடப்பட்டன.

அதன்பின் கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் ஸ்ரீநகரில் ஒரே ஒரு ஐநாக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டது. அதன் பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ‘பதான்’ படம் வெளியிடப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.

இதுகுறித்து ஐநாக்ஸ் தியேட்டர் உரிமையாளர் விகாஸ் தர் கூறும்போது, ‘‘ஓபன்ஹைமர் படத்தை காண ஏராளமான மக்கள் வருவது பெரும் ஆச்சரியமாக உள்ளது. எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி அடுத்த சில நாட்களுக்கும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஹாலிவுட் படத்துக்கு இந்த அளவுக்கு ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE