சட்டப்பேரவையில் சொந்த மாநில அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சொந்த மாநில அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஒரு மசோதா மீதான விவாதத்தின்போது, மணிப்பூர் வன்முறைகள் குறித்து ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரச்சினை எழுப்பினர். இதற்கு மாநில ஊர்க்காவல் படை, சிவில் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் இணை அமைச்சரான ராஜேந்திர சிங் குதா ஆட்சேபம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “நாமும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எனவே மணிப்பூர் பிரச்சினையை எழுப்புவதற்கு பதிலாக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் (பாஜக), “அரசியலமைப்பின் 164(2) பிரிவின்படி, கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் அரசு செயல்படுகிறது. ஒரு அமைச்சர் பேசினால், முழு அரசும் பேசுவதாக அர்த்தம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இந்த அரசை அமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். அவரை நான் வாழ்த்துகிறேன். ஆனால் இது வெட்கக்கேடான விஷயம்” என்றார்.

இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்யுமாறு மாநில ஆளுர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு முதல்வர் அசோக் கெலாட் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று ராஜேந்திர சிங் குதா பதவி நீக்கம் செய்யப்பட் டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

மணிப்பூரில் 2 பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் குறித்து பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை தனது வேதனை மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும்போது ராஜஸ்தானையும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பிரதமர் கூறும்போது, "ராஜஸ்தான், சத்தீஸ்கர் அல்லது மணிப்பூர் என எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஆனால் மணிப்பூருடன் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை பிரதமர் சமன்செய்து பேசியதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜு கார்கே ஆட்சேபம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE