கரோனாவுக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்றம் - மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனாவுக்குப் பின்னர் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதையொட்டி, 7-வது கட்ட வேலைவாய்ப்புத் திருவிழா (ரோஜ்கர் மேளா) நாடு முழுவதும் 44 இடங்களில் நேற்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வருமான வரி, அஞ்சல், சுகாதாரத் துறைகள், பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனம், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் 25 பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசியதாவது: இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம். அதன்படி, தனியார், அரசுத் துறைகளில் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தைய காலத்தில் அரசுப் பணி என்பது அதிகாரம் மற்றும் அந்தஸ்துகளுக்கு அடையாளமாக இருந்தது. தற்போது அரசுப் பணிகளிலும், நிர்வாகத்திலும் கலாச்சாரம் மாறியுள்ளது. பணியாளர்களிடையே சேவை மனப்பான்மை அதிகரித்துள்ளது.

உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் 2014-ல் 12-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 3-வது இடத்துக்கு வந்துவிடும்.

20 கோடி தடுப்பூசி: கரோனா பேரிடரின்போது, வளர்ந்த நாடுகளுக்கே 20 கோடி தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. மற்ற நாடுகளைக் காட்டிலும், கரோனாவுக்கு பின்னர் இந்தியா பொருளாதாரத்தில் பெரிதும் முன்னேறி உள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்வில், வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்துரு, தலைமை ஆணையர்கள் ஜெயந்தி கிருஷ்ணன், டி.என்.கர், இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் அரவிந்த் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல, சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடைகள் வடிவமைப்புத் தொழில் நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 198பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சுங்கத் துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ், சரக்கு மற்றும் சேவை வரி முதன்மை தலைமை ஆணையர் மாண்டலிகா னிவாஸ், ஆணையர் தமிழ்
வளவன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 109 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மீன்வளம், பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். அவர்
பேசும்போது, ‘‘நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமாகும். அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வரும் 2047-ம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியா வளர்ந்த நாடு என்ற நிலையை அடைவதே தற்போதைய இலக்காகும்’’ என்றார்.

அதேபோல கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் நாராயணசாமி, 139 பேருக்கு பணி
நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE