தெலங்கானாவில் ஒரே மாதத்தில் ரூ.1.8 கோடி சம்பாதித்த தக்காளி விவசாயி: 7,000 பெட்டிகள் கிலோ ரூ.100-க்கு விற்பனை

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்டத்தில் தக்காளி பயிரிட்ட விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் ரூ.1.8 கோடி சம்பாதித்துள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் சிலர்
அதிக லாபம் காரணமாக கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.

10-ம் வகுப்பு வரை..: அந்தப் பட்டியலில் தெலங்கானா மாநிலத்தின் மேதக் மாவட்டம், கவுடிபல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயி மஹிபால் ரெட்டியும் சேர்ந்துள்ளார். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், பிறகு விவசாயத்தை முழுநேரத் தொழிலாக ஏற்றுக்கொண்டார்.

ஹைதராபாத் நகருக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால், இவர் தனது நிலத்தில் விளைந்த தக்காளிகளை ஹைதராபாத் வியாபாரிகளுக்கு கிலோ ரூ.100-க்கு விற்று கொள்ளை லாபம் அடைந்துள்ளார்.

8 ஏக்கரில் பயிரிட்டேன்...: இதுகுறித்து 40 வயது மஹிபால் ரெட்டி கூறியதாவது: நான் கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல்கட்டமாக 8 ஏக்கரில் தக்காளி பயிரிட்டேன். பிறகு ஜூன் 15-ம்
தேதி தக்காளி அறுவடை செய்தேன். முதல் தரமான எனது தக்காளிகளை ஹைதராபாத் சந்தையில் விற்றேன்.

இதுவரை நான் ஏறக்குறைய ரூ.2 கோடி வருமானம் ஈட்டியுள்ளேன். இதில் எனது செலவுகள் போக ரூ.1.8 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. இன்னமும் என்னிடம் 40 சதவீத
தக்காளிகள் உள்ளன. இவற்றையும் ஹைதராபாத் சந்தையில் விற்பேன்.

ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவு: ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்தேன். தக்காளி பயிர் நாசமடைவதை தவிர்க்க பயிர்மீது வலை அமைத்தேன். ஆதலால் ‘ஏ’ கிரேட் தக்காளி கிடைத்தது. அதனால் நல்ல லாபம் கிடைத்தது.

ஒரு பெட்டியில் 25 கிலோ தக்காளி இருக்கும். கிலோ ரு.100-க்கு விற்றேன். அதன்படி 7,000 பெட்டிகள் விற்றேன். கோடை வெயிலால் தக்காளி விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்தனர். இதனால் இவர்கள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தக்காளி பயிரிடவில்லை. இதனால் தான் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், நான் தொடர்ந்து
தக்காளியை சாகுபடி செய்தேன். எனக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. இவ்வாறு மகிழ்ச்சியுடன் கூறினார் கோடீஸ்வர விவசாயி மஹிபால் ரெட்டி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE