இந்தியாவில் 2030-க்குள் மரபு சாரா எரிசக்தி திறனை 50 சதவீதமாக உயர்த்த திட்டம்: ஜி20 கூட்டத்தில் பிரதமர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் நேற்று நடந்தது. இதில் ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற 9 நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங்தலைமை வகித்தார். இதில் வீடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எரிசக்தி இன்றி, எதிர்காலம், நிலைத்தன்மை, வளர்ச்சி பற்றிய பேச்சு நிறைவடையாது.

சூரிய மற்றும் காற்று மின்சாரம் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதேபோல, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வலுவாக செயல்படுத்தி வருகிறது. மரபு சாரா மின்சக்தி திறன் இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்பாக அடைந்துவிட்டோம். தற்போது 2030-ம் ஆண்டுக்குள், மரபு
சாரா எரிசக்தி திறனை 50 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நிலையான, மலிவான, சுத்தமான எரிசக்திக்கான மாற்றத்தில் ஜி20 நாடுகள் மேம்பட வேண்டும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. வளரும் நாடுகள் குறைந்த செலவில் இத்தகைய மாற்றத்தை அடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கான தொழில்நுட்ப இடைவெளியை நீக்குவதற்கான வழிகளை நாம் கண்டறிந்து, எரிசக்தி பாதுகாப்பை நாம் மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 11 கோடியே 90 லட்சம் குடும்பங்கள் சமையல் காஸ் இணைப்பை பெற்றுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் மின் இணைப்பு இருக்க வேண்டும் என்ற மிகப் பெரிய இலக்கையும் நாங்கள் அடைந்துள்ளோம். எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை ஒரு சிறிய இயக்கமாக கடந்த 2015-ம் ஆண்டில் நாங்கள் தொடங்கினோம்.
இது தற்போது உலகின் மிகப் பெரிய எல்இடி விளக்கு விநியோக திட்டமாக மாறியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 4,500 கோடி யூனிட்டுக்கும் மேற்பட்ட மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

மேலும், 2025-ம் ஆண்டுக்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியா முழுவதும் கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பசுமை ஹைட்ரஜன் மூலம் கார்பன் வெளியேற்றம் அற்ற நாடாக மாற, இந்தியா திட்டமிட்ட இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE