மணிப்பூர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு: அசாம் முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு

By செய்திப்பிரிவு

குவஹாத்தி: மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இட்டுச் சென்ற கொடூர சம்பவம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இட்டுச் செல்லப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. இந்தச் சம்பவம் மே 4-ம் தேதி நடந்த நிலையில், அந்த வீடியோ நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒருநாள் முன்பாக வெளியானது எப்படி? மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமையைவிட எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அதிக கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த 19-ம் தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல், கடந்த 16-ம் தேதி ஜோத்பூரில் தலித் சிறுமி ஒருவர், தனது ஆண் நண்பர் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒருவர், தோல்வி அடைந்ததை அடுத்து அவர் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சிறுநீர் கழித்துள்ளனர். கடந்த 13-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதேபோல், மேற்கு வங்கத்தில் கடந்த 8-ம் தேதி, பாஜக வேட்பாளர் ஒருவர், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

பிஹாரில் கடந்த 7-ம் தேதி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 8 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி, பழங்குடியின பெண் ஒருவர் பட்டப்பகலில் 10 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஏன் பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஏன் மணிப்பூர் சம்பவம் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. இதன் பின்னால் லிபரல்கள் இருக்கிறார்கள்" என விமர்சித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குவஹாத்தியில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE