மகாராஷ்டிர நிலச்சரிவு உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; தொடரும் மீட்புப் பணிகள்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ரெய்காட் மாவட்டம், காலாபூர் வட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கிய நிலையில், அவர்களில் சுமார் 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நேற்று முன்தினம் மட்டும் 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 82 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப் பணிகள் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிர காவல் துறை, தீ அணைப்புத் துணை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்னாத் ஷிண்டே நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE