மணிப்பூரில் மீண்டும் வன்முறை: டயர்களைக் கொளுத்தி பெண்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் புதிதாக வன்முறை வெடித்தது. காரி பகுதியில் இரு முக்கிய சாலைகளை பெண்கள் முற்றுகையிட்டனர். டயர்களைக் கொளுத்திபோட்டு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார், ராணுவம், அதிரடிப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அந்தப் பகுதியில் தீ வைக்கப்பட்ட டயர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு. அப்பகுதியில் கொடி அணிவகுப்பும் நடத்தினர். காரி பகுதி மட்டுமல்லாமல், அருகில் உள்ள பல பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மணிப்பூர் வன்முறை பின்னணி: மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுவரை அங்கு 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கலவரத்தின் வேர்களைத் தேடினால், அது மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கிய உத்தரவுக்கு இழுத்துச் செல்கிறது. மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப் பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

சமவெளியில் இருக்கும் மைதேயி சமூகத்தினர் கல்வி, தொழிலில் ஏற்கெனவே முன்னேறிய சமூகமாக அறியப்படுகிறார்கள். அரசியலிலும் இவர்களின் பிரதிநிதித்துவம் அதிகம். அதனால் மலைப்பகுதியில் வசிக்கும் குகி பழங்குடியினர் மைதேயி சமூகத்தினரை பட்டியல் இனத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில், அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது.

சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில்தான் கடந்த மே 4 ஆம் தேதி நடந்த கொடூரங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களின் வீடியோ, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண் எனப் பல வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. மைதேயி தரப்பில் 4 பெண்களும், குகி ஸோ தரப்பில் 20 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று காலை இம்பாலின் காரி பகுதியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாலும் டயர்களை கொளுத்தியதாலும் பதற்றம் ஏற்பட்டது. இதில் ஈடுபட்ட தரப்பு மைதேயி சமூகத்தினரா அல்லது குகி சமூகத்தினரா என்பது இன்னும் தெரியவரவில்லை. | வாசிக்க > மணிப்பூர் அதிர்ச்சிகள்: அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE