மணிப்பூர் விவகாரத்தால் அமளி: நாடாளுமன்ற அவைகள் 2-வது நாளாக முடங்கின

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம், அவைக் குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கம், டெல்லி மசோதா தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் 2-வது நாளாக நேற்றும் முடங்கின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம்தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தால் அமளிஏற்பட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை தொடங்கியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘விவாதங்கள் மூலம்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால், அவையில் விவாதம் நடத்த நீங்கள் விரும்பவில்லை’’ என்றார். அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அமளி: மாநிலங்களவை நேற்று காலை தொடங்கியதும், விவாதிக்க உள்ள மசோதாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் குறித்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். அப்போது, டெல்லி அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்படும் டெல்லி அரசின் திருத்த மசோதா குறித்துகுறிப்பிட்டார். ‘‘அரசியல் சாசனத்துக்கு எதிராக எந்த மசோதாவையும் கொண்டுவர விடமாட்டோம்’’ என்று சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

அதற்கு தன்கர், ‘‘விதிமுறைகளின்படி ஒவ்வொருவருக்கும் நேரம் தருகிறேன். நம் நடத்தையை 130 கோடி மக்கள் கவனிக்கின்றனர். நாம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். இது தெரு அல்லது நடைமேடை அல்ல’’ என்றார். ஆனால், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர். பிரமோத் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் குறித்து திரிணமூல் உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் நேற்று முன்தினம் பேசியதில் சில வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.இதுதொடர்பாக ஒழுங்கு பிரச்சினையை ஓ பிரைன் நேற்று எழுப்பினார். மேலும் பல உறுப்பினர்கள் அமளியில்ஈடுபட்டதால், மதியம் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தால் 2-வது நாளாக நேற்றும் இரு அவைகளும் முடங்கின. இரு அவைகளும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்