மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன?: மக்களவையில் மத்திய அமைச்சர் பாரதி விரிவான பதில்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் நிலை குறித்து மக்களவையில் நேற்று திமுக எம்பி கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சரான டாக்டர்.பாரதி பிரவீன் பவார் விரிவான பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மத்தியஇணை அமைச்சரான டாக்டர் பாரதி பிரவீன்பவார் எழுத்து பூர்வமாக அளித்த பதில்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, எல்லைச் சுவர் கட்டுவது உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன.

திட்ட மேலாண்மை ஆலோசகர், கடந்த ஜுன் 07, 2023-ல் நியமிக்கப்பட்டார். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை(ஜேஐசிஏ) மூலம் கூடுதல் பட்ஜெட் வள(EBR) நிதியுதவியின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதிலிருந்து திட்டத்தை செயல்படுத்து வதற்கு அதிக காலம் எடுத்துள்ளது. அதன்படி, தொடக்கஅறிக்கை, வளாக மாஸ்டர் பிளான், வசதி திட்டமிடல், மருத்துவமனை வடிவமைப்பு கருத்து மற்றும் உபகரண திட்டமிடல் ஆகியவற்றை தயாரித்த பிறகு, மார்ச் 26, 2021-ல் ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேகடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் திட்ட செலவு ரூ.1,264 கோடி மற்றும் திருத்தப்பட்ட செலவு ரூ. 1,977.8 கோடி ஜேஐசிஏ மூலம் 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் தடுப்பு மற்றும் வேறு சில சேர்த்தல்களின் அடிப்படையில், அமைச்சகம் விரிவாக ஆய்வு செய்யதிருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக் குழுவை (ஆர்சிசி) அமைத்தது.

அதன்பிறகு, நிதி மதிப்பீட்டுக்கான திட்டத்தை அமைச்சகம் ஆர்சிசி அறிக்கையுடன் செலவினத் துறை அதிகாரியிடம் (டிஒஇ) சமர்ப்பித்தது. ஆய்வுக்குப் பிறகு, டிஒஇ இந்த முன்மொழிவை மதிப்பிட்டு ஒப்புதல் அளித்தார். மேலும் இந்த அமைச்சகத்தால் அக்டோபர் 11, 2022-ல் அளிக்கப்பட்டது. மொத்த திட்டமதிப்பான ரூ.1977.8 கோடியில், 82 சதவிகித செலவை ஜேஐசிஏவின் கடனாகவும், மீதமுள்ளவை இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடன் ஒப்பந்தத்தின்படி, எய்ம்ஸ் மதுரை மருத்துவமனையை அமைப்பதற்கான ஜேஐசிஏ கடனுக்கான வழங்கல் நடைமுறையானது உறுதிமொழி நடைமுறை மற்றும் திருப்பிச் செலுத்தும் நடைமுறை ஆகும்.

இந்திய அரசு முதலீட்டுக்கு முன் எல்லைச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ12.35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. எய்ம்ஸ் மதுரை மருத்துவமனைக்கு இந்திய அரசின் சம்பளம், மூலதனம் மற்றும் பொதுத் தலைவரின் கீழ் இன்றுவரை வழங்கப்பட்ட மொத்த மானியம் ரூ.69.99 கோடி.கடன் ஒப்பந்தத்தின்படி, திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலம் 5 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026 வரை). தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள தற்காலிக வளாகத்தில் இருந்து 50 மாணவர்களுக்கான எய்ம்ஸ் மதுரைக்கான எம்பிபிஎஸ் இளநிலை வகுப்புகள் ஏப்ரல், 2022 முதல் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது எம்பிபிஎஸ் படிப்புக்கு 99 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு துறையிலும் ஆசிரியர்களுடன் தற்போது மொத்தம் 12 துறைகள் செயல்படுகின்றன. உடற்கூறியல், உடலியல்,சமூகம் மற்றும் குடும்ப மருத்துவம், உயிர்வேதியியல், மருந்தியல், நோயியல், நுண்ணுயிரியல், தடயவியல் மருத்துவம் & நச்சுயியல், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு இயல் & பெண்ணோயியல் துறைகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தனது பதிலில் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE