பாஜகவுடன் மஜத இணைந்து செயல்படும் - குமாரசாமி அறிவிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் மஜத மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும், பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் இணைந்து நேற்று மாலை பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது குமாரசாமி கூறியதாவது: கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மக்களவைத் தேர்தலுக்கு பின் சிக்கல் ஏற்படும்.கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸூடன் கூட்டணி அமைக்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் நான் 5 ஆண்டுகள் பதவி வகித்திருப்பேன். காங்கிரஸார் எனக்கு மோசம் செய்துவிட்டனர். நான் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையை ஏற்காமல் போய்விட்டேன். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவுடன் எங்களது கட்சி இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவே பாஜகவுடன் இணைந்திருக்கிறேன்.

காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்கள் பணியிட மாற்ற விவகாரத்தில் பல லட்சங்கள் ஊழல் நடந்துள்ளது. இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எங்கள் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா இந்த விஷயத்தில் எனக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை நான் அறிவிப்பேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE