‘எம்பி, எம்எல்ஏ-க்கள் தொடர்புடைய 1,581 கிரிமினல் வழக்குகள் எந்த நிலையில் உள்ளன’ என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர், தண்டனை முடிந்து விடுதலையான நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை உள்ளது. இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின் குமார் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இப்பிரிவை ரத்து செய்துவிட்டு கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஒருவர், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வயது நிர்ணயிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வேறு சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
சிறப்பு நீதிமன்றங்கள்
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியலில் குற்றவாளிகள் நுழைவதை தடுப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தாலும் ஒத்துழைக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
கடந்த 2014 பொதுத் தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்த அரசியல்வாதிகளில் 1,581 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அவர்களே தெரிவித்துள்ளனர். இதில் எத்தனை பேர் எம்பி, எம்எல்ஏ-க்களாகி உள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் எந்த நிலையில் உள்ளன. அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவு எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 1,581 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி உள்ளனரா? வழக்கு எந்த நிலையில் உள்ளது என்ற விவரங்களை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 2014 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்று வரை அரசியல்வாதிகள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குவது குறித்த திட்ட அறிக்கை ஒன்றையும் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரங்களையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago