மணிப்பூர் வீடியோ | நாட்டைப் பாதுகாத்த என்னால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை - கார்கில் போர் ராணுவ வீரர் வேதனை

By செய்திப்பிரிவு

காங்போக்பி: மணிப்பூரின் காங்போக்பியில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஒன்று புதன்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்திய ராணுவத்தில் அசாம் ரெஜிமென்ட்டின் சுபேதாராக பணியாற்றியவர்.

உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, "நான் கார்கில் போரில் போராடியவன். அதேபோல் இலங்கைச் சென்ற இந்திய அமைதிக் குழுவில் இருந்திருக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால் என் மனைவியையும், என் சக கிராமத்தினரையும் காப்பாற்ற முடியவில்லையே" என்றார் வேதனையாக.

மேலும் அவர், “துக்ககரமான அந்த மே 4-ம் தேதி கிராமத்தில் பல வீடுகளை எரித்து இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கிராமத்து சாலையில் பலர் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்றது. இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது போலீசார் அங்கே இருந்தனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. வீடுகளுக்கு தீ வைத்து பெண்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE