மணிப்பூர் வன்கொடுமை: 78 நாட்களாக போலீஸ் காத்திருக்க யார் காரணம்? - திரிணமூல் காங். கேள்வி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மணிப்பூரில் குகி சமூகத்தைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகும் வரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காத காரணம் தொடர்பாக கேள்விகளை அடுக்கியுள்ளார் திரிணமூல் காங்கிஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலே.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர், "மணிப்பூர் அவலம், வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் வரை காவல் துறை காத்திருந்தது ஏன்? ஒருவேளை கைது செய்யப்பட்டவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களா? 78 நாட்களாக போலீஸ் காத்திருந்ததன் பின்னணியில் இருப்பது யார்? முதல்வர் பைரன் சிங் அவர்களே, நீங்கள் இன அழிப்புக்கு முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறீர்கள். மைதேயி சமூகத்தினரும் சரி, குகி சமூகத்தினரும் சரி உங்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். மணிப்பூரைக் காப்பாற்ற நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

நீங்கள் இந்தப் பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால், இதே சம்பவம் தொடர்பாக ஒரு மாதத்துக்கு முன்னரே முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. தாமாக முன்வந்து என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? எந்த ஒரு புகாரும் பதிவாகாத நிலையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளுதலே தாமாக முன்வந்து என்பதற்கான அர்த்தம்" என்று கோகலே அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

செய்தியும், காவல் அதிகாரியின் விளக்கம்: முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ஒரு செய்தித்தாளுக்கு அளித்தப் பேட்டியில் சம்பவத்தன்று கலவரக்காரர்களுக்குப் பயந்து தாங்கள் வனப்பகுதியில் ஒளிந்திருந்ததாகவும், அப்போது காவல் துறையினர் அவர்களை மீட்டு வரும் வழியில் மைத்தேயி குழுவினரிடம் தங்களை விட்டுச் சென்றதாகவும் கூறியிருந்தார். இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து நாங்போக் செக்மாய் காவல் நிலைய மூத்த அதிகாரி சச்சிதானந்தா கூறுகையில், "சம்பவம் நடந்த தினத்தன்று எங்கள் காவல் நிலையம் வன்முறையாளர்களால் சூழப்பட்டதால் நாங்கள் அந்தக் கலவரத்தை ஒடுக்குவதில் பரபரப்பாக இருந்தோம். மேலும், பாதிக்கப்பட்டப் பெண் கூறியதுபோல் நாங்கள் அந்தப் பெண்களை வன்முறையாளர்களிடம் விட்டு வரவில்லை" என்று விளக்கியுள்ளார்.

புகார் பதிவானது எப்போது? - இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மே 18-ஆம் தேதி தங்போய் வைபெய் கிராமத்தின் தலைவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 குடும்பங்களே வாழும் அக்கிராமத்தின் தலைவரான பைனோமுக்கு வயது 65. சாய்குல் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 4-ஆம் தேதியன்று சம்பவம் நடந்த நிலையில் ஜூலை 19-ஆம் தேதி, அதாவது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு ஒரு நாள் முன்னதாக அது சமூக வலைதளங்களில் வெளியானதன் பின்னணி குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சம்பவம் நடந்த கிராம் ஹெய்ரோக் சட்டப்பேரவை தொகுதிக்குள் உள்ளது. இது பாஜக எம்எல்ஏ தொக்சோமின் தொகுதி. ஆகையால், இது வேண்டுமென்றே இப்போது கசியவிடப்பட்டது என்று சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மணிப்பூர் சம்பவத்தால் இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. பிரதமர் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதம் காட்டி வருகின்றன. கடந்த கூட்டத்தொடர் முழுவதும் அதானி குழுமத்தின் ஹிண்டன்பெர்க் அறிக்கை சர்ச்சையால் முடங்கிய நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்து வருகிறது. | வாசிக்க > மணிப்பூர் கொடூர சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் கைது: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE