ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் பாஜக எம்எல்ஏ, குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 4-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனு தொடர்பாக பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பில் தலையிட முடியாது என்று குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து ராகுல் காந்தி ஜூலை 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது.

விசாரணையின்போது நீதிபதி பி.ஆர்.கவாய், "நாங்கள் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு பக்கமும் இருக்கும் சில சிரமங்களைச் சொல்ல வேண்டும். எனது தந்தை காங்கிரஸ் உறுப்பினர் இல்லை என்றாலும், அவர் அதனுடன் நெருங்கிய தொடர்புடையவர். சிங்வி, நீங்கள் காங்கிரஸில் 40 ஆண்டுகளாக இருக்கிறீர்கள். என்னுடைய சகோதரர் இன்னும் அரசியலில் இருக்கிறார், அவர் காங்கிரஸில் இருக்கிறார். இப்போதும் நான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்களை என்னை அழையுங்கள்" என்றார்.

இதற்கு, ராகுல் தரப்பு வழக்கறிஞர் சிங்வியும், எதிர் தரப்பும் தங்களுக்கு எந்த ஆட்சேபனை இல்லை என்று பதில் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, “அப்படியென்றால் நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். இரண்டு, மூன்று வாரங்களில் பதில் வரும்” என்று நீதிபதி கவாய் தெரிவித்தார்.

அப்போது பேசிய மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, "வாதி 111 நாட்களாக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். அவர் ஏற்கெனவே ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத் தொடரிலும் பங்கேற்க முடியாமல் இருக்கிறார். வயநாடு மக்களவைத் தொகுதியில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. தகுதி நீக்கம் குறித்து மகேஷ் ஜெத்மலானி கவலைப்பட மாட்டார். தகுதி நீக்கம் இடைக்கால நீக்கமாகவும் வழங்கப்படலாம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "நாங்கள் மற்றொரு தரப்பையும் விசாரிக்க வேண்டும். குஜராத் நீதிமன்றம் 100 பக்கத்துக்கு மேல் விரிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வளவு விரிவாக பதில் தாக்கல் செய்ய, அப்படி என்ன இருக்கிறது? இது குஜராத் நீதிமன்றத்தில் நாங்கள் பார்க்கும் விசித்திரமாகும். நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம்" என்றனர்.

இதனைத் தொடர்ந்து, அவதூறு வழக்கு தாக்கல் செய்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, குஜராத் அரசு இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர். இந்த விசாரணையின்போது ராகுல் காந்தியின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், எதிர் தரப்பு (புகார்தாரர்) சார்பாக மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானியும் ஆஜராகினர்.

வழக்கு பின்னணி: கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்று பெயர் வந்தது எப்படி?’’ என்றார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகக் கூறி, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை: இதில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, தனக்கு ஜாமீன் வழங்கிய சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். ஆனால், தண்டனைக்கு தடை விதிக்க சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதன் விசாரணை கடந்த மே மாதம் நடைபெற்றது. ஆனால், சூரத் செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடை விடுமுறைக்குப் பின்னர் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

நீதிமன்றம் தலையிட முடியாது: இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தெரிவிக்கையில், ‘‘ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சரியானதுதான். இதற்கு ராகுல் காந்தி தடை கோர எந்தக் காரணமும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், இதுபோன்ற அவதூறுக் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றார். இந்த உத்தரவினை எதிர்த்து ராகுல் காந்தி ஜூலை 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE