மணிப்பூர் | இரு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற இளைஞரின் வீட்டுக்கு தீ வைப்பு

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இழுத்துச் சென்ற இளைஞர்களில் ஒருவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

கடந்த மே 4-ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர்.

அவர்களில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். அதில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சினர். இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும் அவர்கள் கொலைசெய்தனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த வீடியோ வெளியாகி இரண்டு நாட்களுக்குப் பின்னர் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரது வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்கள் நிச்சயமாக கைது செய்யப்பட்டு வாய்ப்பிருந்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக போலீஸார் கடத்தல், கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இழுத்துச் சென்ற இளைஞர்களில் ஒருவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் சார்ந்த மெய்தி இனப் பெண்களே அந்த இளைஞரின் வீட்டுக்குத் தீவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தால் ஒட்டுமொத்த மெய்தி இனத்துக்கும் அந்த இளைஞர்கள் அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக அப்பெண்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE