ஆம் ஆத்மியின் நட்பால் டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு சிக்கல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி அதன் மூத்த தலைவர் மறைந்த ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்தது. அதனிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்து டெல்லியை மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சி செய்கிறது. இங்கு காங்கிரஸை விட பாஜக பலமான எதிர்க்கட்சியாக உள்ளது.

டெல்லியில் கடைசியாக 2020-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 54%, பாஜகவுக்கு 38%, காங்கிரஸுக்கு 4.26% வாக்குகள் கிடைத்தன. இதற்குமுன் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 57%, காங்கிரஸ் 22.5%, ஆம் ஆத்மி 18.1% வாக்குகள் பெற்றன.

இந்த சூழலில், பாஜகவை விட காங்கிரஸ் கட்சியையே ஆம் ஆத்மி தலைவர்கள் அதிகமாக விமர்சித்து வந்தனர். இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், டெல்லி அரசு அதிகாரிகள் அவசரச் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கும்படி காங்கிரஸ் கட்சியிடம் ஆம் ஆத்மி தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. இதற்கு காங்கிரஸ் சம்மதித்து அம்மசோதாவை எதிர்ப்பதாக அறிவித்தது. இதையடுத்து, பெங்களூரூவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் 2-வது கூட்டத்திலும் ஆம் ஆத்மி கலந்துகொண்டது.

இதனால் டெல்லிவாசிகள் இடையே ஆம் ஆத்மியை கடுமையாக பேசிய காங்கிரஸ் தலைவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகிவிட்டனர். இனி, டெல்லியின் அரசியல் மேடைகளில் பாஜகவை மட்டும் விமர்சித்து விட்டு, ஆம் ஆத்மியை தவிர்ப்பது விமர்சனங்களை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, “ஆம் ஆத்மி பலன் அடையும் வகையில் டெல்லி அதிகாரிகள் மசோதாவிற்கு ஆதரவளிக்க நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். இதை மீறி ஆதரவு அளிப்பதாக எங்கள் தலைமை அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் தாக்கமாக பல முக்கியத் தலைவர்கள் கட்சிமாறும் வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும், மத்திய அரசின் என்ஆர்சி, சிஏஏ மற்றும் பொது சிவில் சட்டத்திற்கு முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு அளித்தார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது முஸ்லிம் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தனர்.

இதனிடையே, தனது மசோதாவிற்கு ஆதரவு கிடைக்கும் வரை காங்கிரஸை கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்காக, காங்கிரஸ் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்கும்படி, முதல்வர் கேஜ்ரிவாலை பிற கட்சித் தலைவர்கள் வற்புறுத்தி வருவதாகத் தெரிகிறது. விமர்சனத்தால் அதிருப்தியில் உள்ள டெல்லி காங்கிரஸாரை சமாதானப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE