மகாராஷ்டிரா நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு: கனமழையால் புனே மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ராய்காட் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 100-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து, மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

காணமல் போனவர்கள் குறித்த தகவலை அறிவதற்காக அவசரகட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையால் விமானம் மூலமான மீட்புப் பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரி உயிரிழப்பு: மீட்புப் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் அவசரகட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புக்கு உதவிஎண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ராய்காட் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட தாலுகாக்களில் மலைப்பாங்கான பகுதிகளில் கனமழை தொடர்ந்ததையடுத்து பள்ளிகளுக்கு வியாழக்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அம்பேகான், கெத், ஜுன்னார், போர், புரந்தர்,முல்ஷி மற்றும் மாவல் தாலுகாக்களில் மொத்தம் 355 பள்ளிகள் நேற்று திறக்கப்படவில்லை. குழந்தைகளின் பாதுகாப்பைஉறுதி செய்ய கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவல் தாலுகாவில் உள்ள லோனாவாலா பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 273 மிமீ மழையும், முல்ஷி தாலுகாவில் உள்ள லவாசா மலைப்பகுதிகளில் 143 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE