இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழை எம்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பு: ஆய்வு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்எல்ஏ) சொத்து மதிப்பின் அடிப்படையில் பணக்காரர் மற்றும் ஏழை உறுப்பினர்களை அடையாளம் கண்டுள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR). இது தொடர்பாக ஆய்வு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் உள்ள எம்எல்ஏ-க்களில் சுமார் 1,400 கோடி ரூபாயை சொத்து மதிப்பாக கொண்டுள்ளவர் பணக்கார எம்எல்ஏ-வாக அறியப்படுகிறார். அதே போல 2,000 ரூபாய் கூட கைவசம் இல்லாதவர் ஏழை எம்எல்ஏ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச எம்எல்ஏ-க்கள் குறித்த தகவல் இதில் இடம்பெற்றுள்ளது. குற்றப் பின்னணி, நிதி, கல்வி, வயது, பாலினம் மற்றும் இதர விவரங்கள் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 224 எம்எல்ஏ-க்கள் வழங்கிய தகவல் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 எம்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் உள்ளது.

பணக்கார எம்எல்ஏ-க்கள்: நாட்டின் முதல் மூன்று பணக்கார எம்எல்ஏ-க்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முதல் இடத்தில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், 1,413 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார எம்எல்ஏ-வாக முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரூ.1,267 கோடி சொத்து மதிப்புடன் சுயேட்சை எம்எல்ஏ கே.ஹெச்.புட்டசுவாமி கவுடா உள்ளார். இவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மூன்றாம் இடத்தில் ரூ.1,156 கோடி சொத்து மதிப்புடன் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக எம்எல்ஏ பிரியா கிருஷ்ணா உள்ளார்.

டாப் 10 பணக்கார எம்எல்ஏ-க்களில் 4 பேர் காங்கிரஸ் மற்றும் 3 பேர் பாஜகவை சேர்ந்தவர்களாக உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ரூ.668 கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ரூ.510 கோடி சொத்து மதிப்புடன் 7-ம் இடத்தில் உள்ளார்.

ஏழை எம்எல்ஏ-க்கள்: நாட்டிலேயே வெறும் 1,700 ரூபாய் வைத்துள்ள மேற்கு வங்க மாநில இண்டஸ் தொகுதி எம்எல்ஏ நிர்மல் குமார் தாரா, ஏழை எம்எல்ஏ-க்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் பாஜகவை சேர்ந்தவர். இந்த பட்டியலில் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தலா 2 எம்எல்ஏ-க்கள் இடம்பெற்றுள்ளனர். ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலிருந்து தலா 1 எம்எல்ஏ-க்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE