பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் புகார் அளித்தனர். பின்னர், அந்தச் சிறுமியும் அவரது தந்தையும் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வீராங்கனைகள் 6 பேர் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்திய டெல்லி போலீசார், பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனினும், பிரிஜ் பூஷன் சிங் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பிரிஜ் பூஷன் சிங் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் ஹர்ஜீத் சிங், இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கின் மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமருக்கும் மேஜிஸ்ட்ரேட் முன்ஜாமீன் அளித்துள்ளார். இருவரும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான ஜாமீன் பத்திரங்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளித்த மேஜிஸ்ட்ரேட், “உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE