”மணிப்பூர்... மணிப்பூர்... மணிப்பூர்...” - நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. மக்களவைத் தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 2 இந்நாள் மற்றும் 11 முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்தார். பின்னர், அவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடந்து மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல், முற்பகல் 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கியதும் அதன் தலைவர் ஜெக்தீப் சிங் தன்கர் இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பாஜகவின் ஹர்வார் துபேவுக்கான இரங்கல் குறிப்பை வாசித்தார். இடைப்பட்ட நாட்களில் உயிரிழந்த முன்னாள், இந்நாள் உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் பகல் 12 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போது மணிப்பூர் நிலவரம் குறித்து அவையில் விதி 267- ன் கீழ் விவாதிப்பது தொடர்பாக உறுப்பினர்களுக்குள் எழுந்த முரண்பாடு காரணமாக அவை மீண்டும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மதியம் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "மணிப்பூர்" , "மணிப்பூர்", "மணிப்பூர் பற்றி எரிகிறது" என்று முழக்கங்கள் எழுப்பினர். இந்தக் கூச்சல்களுக்கு மத்தியில் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருப்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். மணிப்பூர் ஒரு தீவிரமான விவகாரம். அது குறித்து விவாததம் நடக்கும்போது உள்துறை அமைச்சர் விரிவாக விளக்கமளிப்பார். விவாதம் எப்போது நடக்கவேண்டும் என்று சபாநாயகர் முடிவு செய்வார்" என்றார்.

என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கிரிட் சோலங்கி, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

அதேபோல் மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவாகரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதைத் தொடர்ந்து அவைத் தலைவர் ஜெக்தீப் சிங் தன்கர், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்கஜூன கார்கே அவையில் பேசுகையில், "மணிப்பூர் பற்றி எரிகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பிரதமர் அமைதியாக இருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே பேட்டி கொடுக்கிறார்" என்றார்.

முன்னதாக, மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், நேற்று வெளியான கொடூர சம்பவத்தின் வீடியோவுக்குப் பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி பேசுகையில், “எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். இந்த விவாகரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறுகிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில், டெல்லி அவசர சட்ட மசோதா, தபால்சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா,தேசிய பல் ஆணைய மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா உட்பட 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வனப் பாதுகாப்பு திருத்த மசோதா, உயிரியல் மாறுபாடு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை எதிர்க்க 26 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதனிடையே மணிப்பூர் கலவரம் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என்று புதன்கிழமை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்