மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்தப்படும் வீடியோவை அகற்ற சமூக வலைதளங்களுக்கு அரசு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்தி இட்டுச் செல்லும் வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகுந்த அதிருப்தியைத் தரக்கூடியதாக இருப்பதாலும், இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதாலும் இந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மணிப்பூரில் இருந்து வெளியாகி உள்ள இரண்டு பெண்களின் பாலியல் வன்கொடுமை குறித்த வீடியோ கொடூரமானது; கண்டிக்கத்தக்கது; மனிதாபிமானமற்றது. இது தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் பேசினேன். இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

மே 4-ம் தேதிக்குப் பிறகு மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து நடந்த இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி இருப்பதால் அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பூர்வகுடி பழங்குடியின தலைவர்கள் மன்றம் (ITLF) சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தௌபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னணி: மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை பட்டியல் சமூகத்தவர்கள் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடந்த மே 4-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE