நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முதல் நாளில் இரண்டு அவைகளும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 23 நாட்களில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் டெல்லி அவசர சட்ட மசோதா, தபால் சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா, தேசிய பல் ஆணைய மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா உட்பட 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படஉள்ளன. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வனப் பாதுகாப்பு திருத்த மசோதா, உயிரியல் மாறுபாடு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை எதிர்க்க 26 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதனிடையே, மணிப்பூர் கலவரம் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என்று புதன்கிழமை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வியாழக்கிழமை காலையில் கூடியது. இதனைத் தொடர்ந்து மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கூட்டத் தொடரின் முதல் நாளில் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதில் மக்களவை மதியம் 2 மணி வரையிலும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவை மீண்டும் 12 மணிக்கு கூடிய நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE