பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி: கைதான 5 பேரிடம் துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ள‌னர். கைதானவர்கள் பதுக்கி வைத்த துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 7 மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் 18-ம் தேதி இரவு பெங்களூருவில் மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூருவில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களை சேர்ந்த‌ 10 பேர் சதியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் துரிதமாக செயல்பட்டு சையத் சோஹைல், உமர், ஜுனைத், முதாஷிர், ஜாஹித் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 3 மடிக்கணிணி, 2 வாக்கி டாக்கி, ஒரு துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த 5 பேருக்கும் 2017-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் கைதாகி 5 பேரும் பெங்களூரு மத்திய சிறையில் இருந்தபோது, தீவிரவாதி டி.நசீரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அவரது தொடர்பின் மூலம் ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்த அமைப்பை சேர்ந்த வெளிநாட்டு தீவிரவாதி ஒருவர் இந்த 5 பேருக்கும் மூளையாக இருந்துள்ளார். அதன் மூலமாகவே துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பு, அதை கையாளும் முறை ஆகியவற்றை பயின்றுள்ளனர்.

5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். இந்த சதியில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது முதல்கட்டவிசாரணையில், தெரியவந்துள்ளது. இந்த 10 பேர் மீதும் ஏற்கெனவே கொலை, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கைதான 5 பேரிடம், எங்கு, எப்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டனர், இன்னும் வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்களா, வெளிநாடு, வெளி மாநிலங்களில் உள்ள தீவிரவாதிகளுடன்தொடர்பு கொண்டிருந்தார்களா என்ற கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE