இருபெரும் கூட்டணிகளில் சேராத 9 அரசியல் கட்சிகள்: மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்க விருப்பம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆகிய இரண்டிலும் சேராமல் 9 அரசியல் கட்சிகள் ஒதுங்கியுள்ளன.

அடுத்த வருட மக்களவைத் தேர்தலுக்காக பாஜக தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) 38 கட்சிகளை சேர்த்து டெல்லியில் பலத்தை காட்டியுள்ளது. அதேசமயம் பெங்களூருவில் 26 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த 2 பெரிய கூட்டணிகளிலும் 9 முக்கிய அரசியல் கட்சிகள் சேரவில்லை.

இதில் ஒன்று பகுஜன் சமாஜ் கட்சி. இதன் தலைவி மாயாவதி, உ.பி.யில் 4 முறை முதல்வராக இருந்தவர். பிறகு பிரதமர் பதவிக்கும் குறிவைத்த இவருக்கு, தாம் உருவான உ.பி.யிலேயே ஆதரவு குறைந்து விட்டது. கடந்த காலங்களில் உ.பி.யில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கைகோத்த மாயாவதி, 2019 மக்களவைத் தேர்தலில் தனது பரமவிரோதிக் கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியுடன் கைகோத்தார். இதனால், சமாஜ்வாதியை விட இரண்டு மடங்காக 10 தொகுதிகளில் வென்ற இவர், இம்முறை யாருடனும் சேரப்போவதில்லை என தனி ஆவர்த்தனம் காட்டுகிறார்.

பஞ்சாபில் பாஜக ஆதரவுடன் இருமுறை ஆட்சியில் இருந்தது சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி). மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து என்டிஏ-வில் இருந்து வெளியேறியது. பஞ்சாபில் தற்போது ஆளும் ஆம் ஆத்மி, இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் என இரு கட்சிகளும் உள்ள ‘இண்டியா’ கூட்டணியில் சேர விருப்பம் இல்லை. வேளாண் சட்ட மசோதாக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுவிட்டதால் இக்கட்சி மீண்டும் என்டிஏ-வில் சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்டிஏ-வின் டெல்லி கூட்டத்திற்கு செல்லாமல் கூட்டணிப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக ஆண்டு வருவது பிஜு ஜனதா தளம். இக்கட்சியை தம்முடன் சேருமாறு எதிர்க்கட்சிகள் அழைத்தன. ஆனால் தனது மாநில நலனுக்காக தனி அரசியல் உள்ளதாகவும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பிரச்சினைகளுக்கு உகந்தபடி ஆதரவு அளிப்பதாகவும் கூறி நழுவி விட்டது. இதே பதிலைத்தான் ஆளும் என்டிஏவிடமும் கூறி வருகிறது.

கர்நாடகாவில் மூன்றாவது பெரிய கட்சி மதசார்பற்ற ஜனதா தளம். இதன் தலைவர் குமாரசாமி 2006-ல் பாஜகவிடமும், 2018-ல் காங்கிரஸிடமும் ஆதரவு பெற்று முதல்வரானார். சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல் படுதோல்விக்கு பிறகு என்டிஏ-வில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு அணியிலும் சேராமல் ஏனோ மவுனம் காக்கிறார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆளும் கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். இக்கட்சி கடந்த 2010-ல் காங்கிரஸில் இருந்து உருவானது. அதன் பிறகு என்டிஏ-வுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வருகிறது. எனினும், ஆந்திர அரசியல் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயங்குகிறது. இக்கட்சிக்கு இரண்டு அணிகளிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி. இக்கட்சி, பாஜக, காங்கிரஸை தவிர்த்து தனது தலைமையில் எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் சேர்க்க விரும்பியது. தற்போது இரண்டு அணிகளின் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் முயல்வதால் தனித்து அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதே காரணங்களுக்காக, ஹரியாணாவில் ஆளும் கட்சியாக இருந்த, இந்திய தேசிய லோக் தளத்தை, இரண்டு அணிகளும் கண்டுகொள்வதில்லை. ஹைதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியையும் சேர்க்க 2 அணிகளும் விரும்புவதில்லை. ஆந்திராவில் 7 எம்எல்ஏ மற்றும் ஓர் எம்.பி.யை கொண்ட இக்கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸின் எதிர்க்கட்சியாகவே கருதப்படுகிறது. அசாமில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட பத்ருத்தீன் அஜ்மலின் ஏஐயுடிஎப் கட்சி, பாஜகவை கடுமையாக எதிர்க்கிறது. எனினும், எதிர்க்கட்சிகளுடன் ஏனோ சேரவில்லை. இரண்டு கூட்டணியிலும் சேராத 9 கட்சிகளும் தனித்துப் போட்டியிடவே விரும்புகின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இரண்டில் ஒரு கூட்டணிக்கு இவை ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE