கர்நாடக பேரவையில் சட்ட மசோதா நகலை கிழித்து வீசிய 10 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் துணை பேரவைத் தலைவர் முகத்தில் சட்ட மசோதா நகலை கிழித்து வீசிய பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெங்களூருவில் 26 எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த தலைவர்களை வரவேற்று உபசரிக்கும் ஒருங்கிணைப்பு பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் நேற்று சட்டப்பேரவையில் முழக்கம் எழுப்பினர்.

முன்னாள் அமைச்சர்கள் ஆர். அசோகா, அஷ்வத் நாராயண் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் போட்டனர். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இருப்பினும் பேரவையின் துணைத் தலைவர் ருத்ரப்பா லமானி தொடர்ந்து அவையை நடத்த முற்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் ஆர். அசோகா, அஷ்வத் நாராயண் உள்ளிட்டோர் சட்டப்பேரவையின் மசோதா நகல்களை கிழித்து ருத்ரப்பா லமானியின் முகத்தில் வீசினர்.

இதையடுத்து பேரவை காவலர்கள் அவருக்கு அரணாக இருந்து தடுத்தனர். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்களை வெளியே அனுப்புமாறு காவலர்களுக்கு ருத்ரப்பா லமானி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, “சட்டப்பேரவையின் விதிமுறைகளை மீறிய எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதன்பேரில் பேரவைத் தலைவர் யு.டி.காதர், “நடப்பு கூட்டத்தொடர் முடியும்வரை ஆர்.அசோகா, அஷ்வத் நாராயண், அரவிந்த் பெல்லட், யஷ்பால் சுவர்ணா, சுனில் குமார், அரக ஞானேந்திரா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE