மக்களவைத் தேர்தல் 2024 - ‘இண்டியா’ கூட்டணியின் முழக்கத்தில் ‘பாரத்’

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இண்டியா’ என்று பெயர் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ‘இண்டியா’ அணியின் முழக்கமாக ‘ஜீதேகா பாரத்’ (இந்தியா வெல்லும்) என்பது இறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடந்த 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற இரண்டு நாள்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, ‘இண்டியா’ (INDIA - Indian National Developmental Inclusive Alliance) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'இண்டியா' என்றால் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று அர்த்தம். கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்ட அடுத்த நாள், 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகளுக்கான தேர்தல் முழக்கமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பாரத் ஜீதேகா... இண்டியா ஜீதேகா..." என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் அல்லது வளர்ச்சி: பெங்களூவில் நடந்த எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தொடக்கவுரையைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்ருமான மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூட்டணிக்கு 'இண்டியா' என்ற பெயரை முன்மொழிந்தார் என்று கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார். இண்டியா பெயர் குறித்து பேசிய மம்தா, "போட்டி என்பது பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயானது அல்ல; பாஜகவுக்கும் இதர இந்தியாவுக்கும் இடையேயானது" என்று கூறியுள்ளார்.

இண்டியா என்பதில் வரும் ‘டி’ என்பது "ஜனநாயகமா" அல்லது "வளர்ச்சியா" என்பது குறித்து நடந்த விவாதத்திற்கு பின்னர், வளர்ச்சி என்பது இறுதி செய்யப்பட்டு 'இண்டியா' என்பதன் விரிவாக்கம் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று முடிவு செய்யப்பட்டது.

இண்டியா vs பாரத்: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இண்டியா' என்று பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வாஸ் ‘இண்டியா’, ‘பாரத்’ என்பது வேறு வேறு கருத்துகள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "நமது கலாச்சார மோதல்கள் இண்டியா மற்றும் பாரத் என்பதை சுற்றியே இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் நமக்கு இண்டியா என்று பெயர் வைத்தனர். காலனியாதிக்க மரபகளில் இருந்து நாம் விடுதலை அடையவேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்துக்காக போராடியுள்ளனர். நாமும் பாரதத்துக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். பாரதத்துக்காக பாஜக" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ட்விட்டரின் பயோ குறிப்பில் இந்தியா என்பதை பாரத் என்றும் அவர் மாற்றியுள்ளார். முன்னதாக, ஹேமந்த பிஸ்வாஸின் ட்விட்டர் பயோ, "முதல்வர் அசாம், இந்தியா" என்று இருந்தது. தற்போது அது,"முதல்வர் அசாம், பாரத்" என்று மாற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE