மகாத்மா காந்தி, அம்பேத்கர் வழியில் நடக்கிறோம் - என்டிஏ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசத் தந்தை மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோகியோ காட்டிய சமூக நீதியின் பாதையில் நடக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) உருவாக்கியதில் எல்.கே.அத்வானி, பால் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகித்தனர். என்டிஏ கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு கிடையாது. கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்றது. ஆனால் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து மத்தியில் என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைத்தோம். என்டிஏ என்றால் புதிய இந்தியா, வளர்ச்சி, லட்சியங்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.

தேசத் தந்தை மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோகியோ காட்டிய சமூக நீதியின் பாதையில் நாங்கள் நடக்கிறோம். மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள் ஆகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

யாரையும் எதிர்க்க என்டிஏ உருவாக்கப்படவில்லை. நாட்டின் வளர்ச்சி, ஸ்திரத்தன்மைக்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. நமது கூட்டணி நல்லெண்ண கூட்டணி. எதிர்மறை எண்ணங்களு டன் உருவாக்கப்படும் கூட்டணிகள் நிச்சயம் வெற்றி பெறாது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் அந்த மாநிலங்களின் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. பெரும்பாலான கட்சிகள் பிராந்திய பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன. இது நாட்டின் நலனுக்கு எதிரானது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE