பொது சிவில் சட்டம் தள்ளிப் போக வாய்ப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாஜகவின் 3 முக்கியக் கொள்கைகளில் பாக்கி இருப்பது பொது சிவில் சட்டம். இதை நாளை (ஜுலை 20) தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வந்தது.

இதனிடையே, பொது சிவில் சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சீக்கியர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பழங்குடிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இச்சூழலில், வரும் செப்டம்பரில் இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில், சவுதி அரேபியா முக்கிய உறுப்பு நாடாக இடம் பெற்றுள்ளது. இத்துடன், வேறு சில முஸ்லிம் நாடுகளையும் மாநாட்டுக்கு அழைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்த முஸ்லிம் நாடுகள் பொது சிவில் சட்டத்திற்கு எதிரானவை. இந்நிலையில், இச்சட்டம் இந்தியாவில் அமலாக்கப்படுவது அந்நாடுகளுக்கு நெருடலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பொது சிவில் சட்டத்தால் எங்களுக்கு அடுத்த வருட மக்களவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் கிடைக்கும். அதேசமயம், சர்வதேச நாடுகள் இடையே இது சர்ச்சையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

எனவே ஜி20 மாநாடு முடிந்த பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அல்லது அடுத்த வருட பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்டத்தை கொண்டுவர யோசித்து வருகிறோம்” என்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முயன்றது. இதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் தொடர் போராட்டத்தில் இறங்கினர். முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அசாமின் இந்துக்கள் மற்றும் சில பழங்குடிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பிருந்தது.

இதுபோன்ற காரணங்களால் சிஏஏ சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும், இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதற்கான விதிமுறைகளை கட்டமைத்து, அறிவிக்கையை வெளியிடாமல் மத்திய உள்துறை அமைச்சகம் காலம் தாழ்த்தி வருகிறது.

இதேபோல், வட கிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணிக் கட்சிகளும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் பொது சிவில் சட்டம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க, தேசிய சட்ட ஆணையத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, நாளை தொடங்கும் கூட்டத்தொடருக்கு முன்பாக பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயாராகும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE