பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை: அதிமுக, பாமக, தமாகா உட்பட 40 கட்சி பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே உட்பட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இப்போதே கூட்டணி வியூகத்தை வகுக்க தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் சார்பில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகள் பங்கேற்றன.

இதற்கு போட்டியாக ஆளும் பாஜக சார்பில் தலைநகர் டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) உட்பட 40-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அந்த கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக மூத்த தலைவர் ஏ.கே.மூர்த்தி, ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஜன சேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி அசோகா ஓட்டல் நுழைவுவாயிலில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அமர்ந்திருந்தார்.

வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1998-ம் ஆண்டில் தேசியஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டது. கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். கூட்டணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சில கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளன. எனினும்,அந்த கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எங்கள் கூட்டணியில் நீடிக்கிறது.

எதிர் அணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளனர். அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இப்போது அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். மக்களவை தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ளன. அதற்குள் எங்கள் கூட்டணி மேலும் விரிவடையலாம். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் கூறின.

தெற்கு பிராந்திய பிரதிநிதியாக மாலை அணிவித்த இபிஎஸ்: மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக கூட்டணி சார்பில் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பிராந்தியத்தில் பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், வடக்கு பிராந்தியத்தில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள், தெற்கு பிராந்தியத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா, அந்தமான்-நிகோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நேற்று நடந்த தே.ஜ.கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இந்த பிராந்தியங்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு தனித்தனியாக மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு பிராந்திய பிரதிநிதியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்