யமுனை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - 45 ஆண்டுகளுக்குப் பின் தாஜ்மஹால் சுவரைத் தொட்டுச் செல்லும் தண்ணீர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் பலத்த மழை பெய்ததால் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது .45 ஆண்டுகளுக்குப் பின்னர் தாஜ்மஹாலின் சுவர்களைத் தொட்டுக் கொண்டு யமுனை ஆற்றின் வெள்ள நீர் செல்கிறது.

டெல்லி, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை ஆகிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்தது. இதனால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை ஆற்றின் நீர்மட்டம் 205.45 மீட்டராகக் குறைந்தது. இருந்த போதிலும் யமுனையில் வெள்ளம் குறையவில்லை. இருகரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தாஜ்மஹாலின் சுவர்களைத் தொட்டுக் கொண்டு யமுனை ஆற்றில் வெள்ள நீர் செல்கிறது. இதற்கு முன்பு 1978-ம் ஆண்டு பெய்த பலத்த மழையின்போது யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது தாஜ்மஹால் சுவர்களைத் தொட்டுக்கொண்டு வெள்ள நீர் சென்றது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் வெள்ள நீர் தாஜ்மஹாலின் சுவர்களைத் தொட்டுச் செல்கிறது.

மேலும் தாஜ்மஹால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவையும் மூழ்கடித்தபடி யமுனை ஆற்றின் வெள்ளம் செல்வதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை (ஏஎஸ்ஐ) உதவி பாதுகாப்பு அதிகாரி பிரின்ஸ் வாஜ்பாயி கூறியதாவது: யமுனை ஆற்றில் பெரிய அளவில் வெள்ளம் வந்தாலும், தாஜ் மஹாலுக்குள் தண்ணீர் வராதபடி அதன் கட்டுமானம் அமைந்துள்ளது.

ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டால், வெள்ள நீரானது, பிரதான கட்டுமானத்துக்குள் நுழைந்து விடாமல் இருக்குமாறு உறுதி செய்யப்பட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு அதன்படி கட்டப்பட்டுள்ளது.

இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைலாஷ் கோயில் அருகேயும், தசரா படித் துறை அருகேயும் தண்ணீர் நுழைவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஆக்ரா நகரில் வெள்ளம் நுழைந்துவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். தாஜ்மஹாலுக்குச் செல்லும் யமுனா கினாரா சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அந்தப் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளத்தை வடியவைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட் டுள்ளனர்.

ஓக்லா அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு 1,06,473 கனஅடி நீரும், மதுராவிலுள்ள கோகுல் அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு 1,24,302 கன அடிநீரும் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE