டெல்லியில் கூடிய என்டிஏ கூட்டணி: 38 கட்சிகள் பங்கேற்பு - பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சவாலா?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லி அசோகா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. தேர்தல் குறித்து ஆலோசிக்க கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கையாக மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.

முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திங்கள்கிழமை கூறுகையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நாட்டை வலுப்படுத்த நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகள் மத்தியில் நல்லாட்சி நடைபெறுகிறது. ஊழல் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா முன்மாதிரியாக விளங்கியது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பதவி, அதிகாரத்துக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். அந்த கூட்டணிக்கு வலுவான தலைமை கிடையாது. அந்த கூட்டணியால் எந்த முடிவும் எடுக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே மாலையில் தொடங்கிய என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், "டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து என்டிஏவின் மதிப்புமிக்க கூட்டணிக் கட்சியினர் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது கூட்டணி காலத்தின் சோதனைகளைக் கடந்த கூட்டணி. இது இந்தியாவை மேலும் முன்னேற்றவும், பிராந்தியங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முயல்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

இந்தக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அதிமுக, தமாகா, பாமக ஆகிய கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றுள்ளனர். பாஜகவுடன் நெருக்கம் காட்டிவந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, லோக் ஜனசக்தியின் இரு பிரிவுகள், ராஷ்ட்ரீய லோக் சமதா, நிஷாத், அப்னா தளம், ஜேஜேபி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, சிவசேனாவின் ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பிரிவு உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. இந்தக்கூட்டத்தில் பங்கேற்கும் 38 கட்சிகளில் பல கட்சிகள் உள்ளூரில் மட்டும் செல்வாக்குள்ளவை. அவைகளில் சில மட்டும் எம்.பி.,க்கள் உள்ளவை. பெரும்பாலான கட்சிகள் இன்றைய சந்திப்பின் மூலம் அடுத்த மக்களவைத் தேர்தலில் சீட் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.

கார்கே விமர்சனம்: எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குபின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "தேசிய ஜனநாயக கூட்டணி 30 கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது. அதில் பல கட்சிகளை நான் இந்தியாவில் கேள்விப்பட்டதே இல்லை. இதற்கு முன்பு அவர்கள் கூட்டம் எதுவும் நடத்தவில்லை. ஆனால் இப்போது ஒவ்வொருவராக சந்தித்துக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்" என்று கூறியிருந்தார்.

ஒமர் அப்துலா கேள்வி: இக்கூட்டம் பற்றி காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், "கடைசியாக எப்போது என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடந்தது. அவர்கள் (பாஜக) என்டிஏவை உயிர்பெறச்செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவர்களுக்கு (பாஜக) கூட்டணி அவசியம்" என்று தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இதுபோன்ற கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE