நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க நாளை (புதன்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார். எனினும், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறுவதால், குடியரசுத் துணைத் தலைவரின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது.

நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மூத்த அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பல கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றுள்ளார் என்பதால், நாளைய கூட்டத்தில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. மழைக்காலக் கூட்டத் தொடரை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வு காணவும் அரசு தயாராக இருக்கும் என்ற உறுதி அரசு தரப்பில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மழைக்காலக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. விலைவாசி உயர்வு, மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன எனும் குற்றச்சாட்டு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை இந்தக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றத்தில் கூடுமா அல்லது பழைய நாடாளுமன்றத்தில் கூடுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடும் என்றும் கூட்டத்தொடரின் இடையே புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு மாற்றிக்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE