“சாதி வெறியும், ஊழலும்தான் எதிர்க்கட்சிகளின் அடையாளம்” - பிரதமர் மோடி சரமாரி தாக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “சாதி வெறியும், ஊழலும்தான் எதிர்க்கட்சிகளின் அடையாளம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

போர்ட் பிளேரில் வீர சாவர்க்கர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "போர்ட் பிளேரில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முனையத்தால், பயணம் மேலும் எளிமையாகும், வணிகம் செய்வதும் மேம்படும்" என தெரிவித்தார்.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "அவர்களின் இந்தச் சந்திப்புக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்னவென்றால், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே வருபவர்கள் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் ஜாமீனில் வெளியில் இருந்தால், அவர்கள் இன்னும் அதிக மரியாதைக்குரியவர்களாகிறார்கள். ஒருவர் ஒரு சமூகத்தை அவமதித்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார் என்றால், அவர் கவுரவத்துக்கு உரியவராகிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் நம்மை கொண்டு வர நாட்டு மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் அவல நிலைக்குக் காரணமானவர்கள் தற்போது தங்கள் கடைகளைத் திறந்துள்ளனர். அவர்களுடைய கடைகளில் சாதி வெறி விஷமும், அபரிமிதமான ஊழலும் உத்தரவாதம். இப்போது, அவர்கள் பெங்களூரில் இருக்கிறார்கள்.

ஜனநாயகம் என்பது மக்களின், மக்களால், மக்களுக்காக எனும் தத்துவத்தைக் கொண்டது. ஆனால் வாரிசு அரசியல் கட்சிகளுக்கு, குடும்பம்தான் எல்லாமே. குடும்பத்துக்குத்தான் முதல் முன்னுரிமை; நாட்டுக்கு ஏதுமில்லை என்பதுதான் அவர்களின் பொன்மொழி. அவர்களிடம் வெறுப்பும், ஊழலும், தாஜா செய்யும் அரசியலும் உள்ளது. அவர்களுக்கு அவர்களின் குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம்; நாட்டில் உள்ள ஏழைகளின் வளர்ச்சி அல்ல. வாரிசு அரசியலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. இனியும் அது தொடரக் கூடாது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களின் எண்ணிக்கை 14 ஆக விரிவடைந்துள்ளது. அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டும்" என குறிப்பிட்டார்.

வீர சாவர்க்கர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் சிறப்பு: தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் ரூ.710 கோடியில் கட்டப்பட்டது. 40,800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. வருடத்துக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 10 விமானப்படை விமானங்களை தரையிறக்க முடியும்.

இந்த விமான நிலையத்தில் இருந்து தற்போது புதுடெல்லி, சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பல நகரங்களுக்கு விமானங்கள் செல்லும் வகையில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE