ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை ஜூலை 21-ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜூலை 21-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த மனுவின் அவசரத்தை வலியுறுத்தி, அதனை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணைத் தேதியை அறிவித்தார்.

மேல்முறையீடு: மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பில் தலையிட முடியாது குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினைத் தள்ளுபடி செய்யது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து ராகுல் காந்தி ஜூன் 15ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அவர் தனது மனுவில் அவர், "தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்ட அவதூறு வார்த்தைகள், அரசியல் எதிரியை பற்றி குறிப்பிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எந்த சமுதாயத்தினருக்கும் எதிரான கருத்து அல்ல. அவதூறு அடிப்படையில் மக்களவை பிரதிநிதி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் அந்ததொகுதி மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பது தடுக்கப்பட்டுவிட்டது.

தண்டனைக்கு தடை விதிக்காவிட்டால், வயநாடுதொகுதி மக்கள் பல மாதங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் பாதிப்பை சந்திப்பர். தேர்தல்பிரச்சாரத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட 3 நபர்கள் புகார் அளிக்கவும் இல்லை வழக்கு தொடுக்கவும் இல்லை. மோடி என்ற துணை பெயருக்கு அவமதிப்பு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவரும் மோத் வனிக சமாஜ் அமைப்பில் இருந்து வந்தவர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இவருக்கும், மோடி சமுதாயத்தினருக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறியிருந்தார்.

வழக்கு பின்னணி: கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்று பெயர் வந்தது எப்படி?’’ என்றார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகக் கூறி, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை: இதில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, தனக்கு ஜாமீன் வழங்கிய சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். ஆனால், தண்டனைக்கு தடை விதிக்க சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதன் விசாரணை கடந்த மே மாதம் நடைபெற்றது. ஆனால், சூரத் செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடை விடுமுறைக்குப் பின்னர் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

நீதிமன்றம் தலையிட முடியாது: இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தெரிவிக்கையில், ‘‘ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சரியானதுதான். இதற்கு ராகுல் காந்தி தடை கோர எந்தக் காரணமும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், இதுபோன்ற அவதூறுக் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE