இவரா பிரதமர் வேட்பாளர்? - பெங்களூருவில் ஒட்டப்பட்ட நிதிஷ் குமார் எதிர்ப்பு போஸ்டர்களால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள பிஹார் முதல்வர் நிதித் குமாரை விமர்சித்து பெங்களூரு நகரின் முக்கியப் போக்குவரத்துப் பகுதிகளில் இன்று காலை போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் இன்று (ஜூலை 18) இரண்டாவது நாளாக ஆலோசனை நடைபெறுகிறது. இந்நிலையில், கூட்டத்துக்கு வருகை தந்துள்ள பிஹார் முதல்வர் நிதித் குமாரை விமர்சித்து பெங்களூரு நகரின் முக்கியப் போக்குவரத்துப் பகுதிகளில் இன்று காலை போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், "பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்களே வருக வருக. சுல்தான்கஞ்ச் பாலத்தை பிஹார் மக்களுக்குப் பரிசளித்தவரே வருக வருக. இவர் எப்போதும் இடிந்துவிழும் பாலங்களை மக்களுக்குப் பரிசாக வழங்குவார். பிஹாரில் உள்ள பாலங்களுக்கே இவர் ஆட்சியைப் பொறுக்க இயலவில்லையாம், அப்படியிருக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க இவர் தலைமையேற்பாராம்" என்று கிண்டல் தொனியில் எழுதப்பட்டிருந்தது.

இன்னொரு போஸ்டரில், "நிலையற்ற பிரதமர் வேட்பாளர் நிதிஷ் குமாரை வரவேற்கிறோம். பெங்களூரு உங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. சுல்தான்கஞ்ச் பாலம் முதலில் சரிந்தது ஏப்ரல் 2022. அதே பாலம் மீண்டும் சரிந்தது ஜூன் 2023" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தப் போஸ்டர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் செல்ல சாலுக்கியா சர்க்கிள் உள்ளிட்ட பிரதான போக்குவரத்துப் பகுதிகளில் இருந்த அவற்றை போலீஸார் கிழித்தெறிந்தனர். மேலும், சர்ச்சைப் போஸ்டர்கள் தொடர்பாக போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவெடுத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில், நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டம் குறித்த விரிவான அப்டேட் > 26 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் விருந்து: மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த பெங்களூருவில் இன்று முக்கிய ஆலோசனை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE