முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு: கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். அவருக்கு வயது 79. அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவை அவருடைய மகன் பேஸ்புக் பதிவு வாயிலாக உறுதிப்படுத்தினார்.

முதல்வர் பினராயி இரங்கல்: முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நானும் உம்மன் சாண்டியும் ஒரே ஆண்டில் தான் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தோம். மாணவர்களாக இருக்கும்போதிருந்தே நாங்கள் அரசியலுக்கு வந்தோம். ஒரே காலகட்டத்தில் பொது வாழ்வில் ஈடுபட்டோம். அவருக்கு பிரியாவிடை செலுத்துவது கடினம். அவர் திறமையான நிர்வாகி. மக்களுடன் நெருங்கிப் பழகிய தலைவர்" என்று தெரிவித்துள்ளார்.

கார்கே புகழஞ்சலி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள குறிப்பில், "உம்மன் சாண்டிக்கு எனது புகழஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கான அவரது சேவையும், அர்ப்பணிப்பும் என்றும் நினைவில் கொள்ளப்படும். அவருடைய தொலைநோக்குப் பார்வை கேரள மாநில வளர்ச்சியில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சாண்டியும் புத்தப்பள்ளியும்.. கேரள சட்டசபையில் அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் உம்மன் சாண்டி. தனது ஆஸ்தான தொகுதியான புதுப்பள்ளியை 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வரலாறு படைத்தவர். 51 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக எம்எல்ஏவாக காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை கேரளத்தின் முதல்வராக பதவி வகித்தவர் உம்மன் சாண்டி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE