நாடு முழுவதும் ரூ.2,381 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தீ வைத்து எரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ‘போதையில்லா இந்தியா’வை உருவாக்க பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி, ஹைதராபாத் போதைத் தடுப்புப் பிரிவு, 6,590 கிலோ போதைப் பொருட்களையும், இந்தூர் பிரிவு 822 கிலோ, ஜம்மு பிரிவு 356 கிலோ போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்திருந்தது.

மேலும், மத்திய பிரதேசத்தில் 1.03 லட்சம் கிலோ, அசாமில் 1,486 கிலோ, சண்டிகரில் 229 கிலோ, கோவாவில் 25 கிலோ, குஜராத்தில் 4,277 கிலோ, ஹரியாணாவில் 2,458 கிலோ, காஷ்மீரில் 4,069 கிலோ, மகாராஷ்டிராவில் 159 கிலோ, திரிபுராவில் 1,803 கிலோ, உ.பி.யில் 4,049 கிலோ போதைப் பொருட்களை சம்பந்தப்பட்ட மாநில அரசின் போதைத் தடுப்பு ஏஜென்சிகள் பறிமுதல் செய்திருந்தன.

இந்நிலையில், ‘போதைப் பொருட்களும் நாட்டின் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2,381 கோடி மதிப்புள்ள 1.40 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை டெல்லியில் இருந்தபடியே அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் பார்வையிட்டார்.

இதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.12,000 கோடி மதிப்புள்ள சுமார் 10 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE